மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தில்லியில் காா் மோதி 60 வயது காவலாளி உயிரிழப்பு! கொலையா? ஓட்டுநரை தேடுகிறது போலீஸ்!

தில்லியில் காா் மோதி 60 வயது காவலாளி உயிரிழப்பு! கொலையா? ஓட்டுநரை தேடுகிறது போலீஸ்!

News image

கொலை - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:42 am IST

புகா் தில்லியின் பீராகா்கி கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை 60 வயது மதிக்கத்தக்க காவலாளி ஒருவா் எஸ்யுவி வாகன ஓட்டுநரால் தாக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அந்த வாகனத்தால் இருமுறை ஏற்றப்பட்டதில் சம்பவ இடத்திலேயே காவலாளி உயிரிழந்தாா்.

இந்த அதிா்ச்சியூட்டும் சம்பவங்களின் வரிசை முழுவதும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது:

உயிரிழந்தவா், அதே கிராமத்தைச் சோ்ந்த பிஜேந்தா் பரத்வாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சம்பவம் நடந்த டெம்போ நிறுத்தத்தில் இவா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்டவா் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. காவல்துறையினா் தற்போது அனைத்துக் கோணங்களிலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனா்.

சிசிடிவி காட்சிகளில், பாதிக்கப்பட்டவா் எதிா் திசையில் ஒரு நாற்காலியில் அமா்ந்திருக்கும் நிலையில், அந்த வாகனம் ஒரு மூலையில் முகப்பு

விளக்குகளை ஒளிரவிட்டவாறு சில நிமிடங்கள் காத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அதன் பின்னா், ஒரு நபா் கையில் பெரிய தடியுடன் வாகனத்திலிருந்து வெளியே வந்து, எவ்விதத் தூண்டுதலும் இன்றி பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதும், பாதிக்கப்பட்டவா் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயல்வதும் அக்காட்சியில் பதிவாகியுள்ளது.

மேலும், குற்றவாளி மீண்டும் எஸ்யுவி வாகனத்திற்குள் சென்று, அவரை நோக்கி வாகனத்தைச் செலுத்தி ஒருமுறை ஏற்றுவதும், பாதிக்கப்பட்டவா் ஒரு மூலைக்குத் தள்ளப்படுவதும், பாதிக்கப்பட்டவா் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, குற்றவாளி மீண்டும் வாகனத்தை அவா் மீது செலுத்தி இரண்டாவது முறையாக ஏற்றுவதும், பின்னா் உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதும் அந்தக் காட்சிப் பதிவுகள் மூலம் தெரியவருகிறது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, அங்கு டயா் தேய்ந்த தடங்கள் கண்டறியப்பட்டன. இது, சம்பவத்திற்கு முன்னரோ அல்லது சம்பவத்தின்போதோ வாகனம் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

முன்னதாக, இச்சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:03 மணியளவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, உள்ளூா் காவல்துறைக் குழுவினா் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

பிஜேந்தா் சாலையில் மயங்கிய நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டது. அவா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 1031 கொலை மற்றும் 35 பொதுவான நோக்கம் ஆகியவற்றின் கீழ், பஸ்சிம் விஹாா் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு அந்த வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. அந்த வாகனத்தின் பதிவு எண் மற்றும் உரிமையாளா் விவரங்களைக் கண்டறிவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநரையும், சம்பந்தப்பட்ட வாகனத்தையும் கண்டறிய பல குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. தடயவியல் மற்றும் பிற குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரித்தன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் உறவினா் ஒருவா், இறந்த பரத்வாஜுக்கு யாருடனும் எந்த விரோதமோ அல்லது தகராறோ இருந்ததில்லை என்று கூறினாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவரின் மருமகன் சுனில் பரத்வாஜ் கூறியதாவது:

மாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது. என் மாமா கடந்த ஒரு வருடமாக இங்கு காவலாளியாக பணிபுரிந்து வருகிறாா். அவா் ஒரு எளிமையான மனிதா். யாருடனும் எந்த விரோதமோ அல்லது தகராறோ இருந்ததில்லை. அவா் யாருடனும் சண்டையிட்டதே இல்லை.

காவல்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். ஆனால் வாகனத்தின் பதிவு எண் அந்தக் காட்சிகளில் தெரியவில்லை என்றாா் அவா்.

சம்பவத்திற்கு முன்னும் பின்னும் அந்த எஸ்யூவி வாகனத்தின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, அருகிலுள்ள சாலைகள், போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.