குடும்பத்தை நடத்த வேலை உறுதி திட்டத்தையே நம்பியுள்ளோம்

தூத்துக்குடி, டிச. 18: மழை வெள்ளத்தால் மானாவாரி பயிர்கள் சேதமடைந்ததால், வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும் என, மத்திய குழுவினரிடம் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் தெரிவ
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி, டிச. 18: மழை வெள்ளத்தால் மானாவாரி பயிர்கள் சேதமடைந்ததால், வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும் என, மத்திய குழுவினரிடம் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

 மத்திய வேளாண்மை துறை இயக்குநர் (பொறுப்பு) கே. மனோகரன், மத்திய நீர் ஆணைய மேற்பார்வை பொறியாளர் (ஒருங்கிணைப்பு) ஆர். தங்கமணி, மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர், தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகளுடன் வெள்ளச் சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து காலையில் ஆலோசனை நடத்தினர்.

 பின்னர் காலை 10 மணியளவில் தங்கள் கள ஆய்வைத் தொடங்கினர். முதலில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 தொடர்ந்து விளாத்திகுளம் வட்டம், வெள்ளப்பட்டி அருகே வெள்ளப்பட்டி-தருவைகுளம் இடையிலான சாலையில் மழை வெள்ளத்தால் அரித்து செல்லப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். கடற்கரையை ஒட்டியுள்ள இந்த சாலையில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையைச் சீரமைக்க ரூ.  10 லட்சம் செலவாகும் என அதிகாரிகள் மத்திய குழுவினரிடம் தெரிவித்தனர்.

 பின்னர், விளாத்திகுளம் பகுதியில் சூரன்குடி, குமாரசக்கனாபுரம், எட்டையபுரம் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம், படர்ந்தபுளி ஆகிய இடங்களில் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசிப் பயறு, மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் ஆகிய மானாவாரி பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.

 இந்த இடங்களைப் பார்வையிட்ட குழுவினர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள் குழுவினரை சந்தித்து பாதிப்புகள் குறித்து முறையிட்டனர்.

 பயிர் செய்ய ஏக்கருக்கு எவ்வளவு செலவு செய்தீர்கள், சேதம் அடையாமல் இருந்திருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்பன போன்ற விவரங்களை குழுவினர் கேட்டனர்.

 இதற்கு பதிலளித்த விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.  7 ஆயிரம் முதல் ரூ.  10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். முழுமையாக மகசூல் கிடைத்தால் ரூ.  20 ஆயிரம் முதல் ரூ.  30 வரை ஏக்கருக்கு மகசூல் கிடைக்கும். ஆனால், அனைத்து பயிர்களும் முழுமையாக சேதமடைந்துவிட்டது என விவசாயிகள் தெரிவித்தனர்.

 மானாவாரி பகுதியாக இருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறைதான் விவசாயம். அதுவும் மழை வெள்ளத்தால் சேதமடைந்துவிட்டது.

தற்போது வருமானத்துக்கு என்ன செய்கிறீர்கள் என குழுவைச் சேர்ந்த கே. மனோகரன் விவசாயிகளிடம் விசாரித்தார்.

அதற்கு பதிலளித்த விவசாயிகள், கூலி வேலை மற்றும் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்துதான் இந்த ஆண்டு குடும்பத்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

 விவசாயிகள் தெரிவித்த அனைத்துக் கருத்துக்களையும் குழு உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கள் ஆய்வை முடித்து கொண்டு மத்திய குழுவினர் கன்னியாகுமரி மாவட்டத்துக்குப் புறப்பட்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com