ஓட்டப்பிடாரம், டிச.18:புதியம்புத்தூரில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்துக்களுக்கும் கல்வி உதவித்தொகையில் சம உரிமையை வலியுறுத்தி வியாழக்கிழமை தாமரை ரத யாத்திரை மேற்கொண்டார்.
சிறுபான்மை மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகையை, இந்து மாணவர்களுக்கும் வழங்க வலியுறுத்தி தாமரை ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடியிலிருந்து புதியம்புத்தூருக்கு வந்த அவருக்கு சில்லாநத்தம் பகுதியில் மக்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது:
மத்திய,மாநில அரசுகள் சிறுபான்மையினரின் வாக்குகளை மட்டுமே பெற்று ஆட்சிக்கு வந்ததாகக் கருதி இந்துக்களை புறக்கணிக்கின்றன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களின் வரிப்பணமாகும். ஒரு ரூபாய் அரிசியை தமிழகத்தில் உள்ள எந்த அமைச்சரும் வாங்கி சமைப்பதில்லை. ஏழைகளின் உழைப்பானது தமிழகத்தின் மதுக்கடைகளுக்குச் செல்கிறது.
இந்துக்களுக்கு கல்விச் சலுகைகள் பாரபட்சமின்றி கிடைக்க வலியுறுத்தி சென்னையில் ஜனவரி. 29-ல் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கட்சியின் தேசியச் செயலர் முரளிதரராவ், மாவட்டத் தலைவர் கனகராஜ்,பொதுச் செயலர் பாலாஜி, பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலர் புதியம்புத்தூர் சேர்மராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்