தூத்துக்குடி, டிச. 18: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பயிர்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என, மத்திய குழுவினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
மத்திய வேளாண்மை துறை இயக்குநர் (பொறுப்பு) கே. மனோகரன், மத்திய நீர் ஆணைய மேற்பார்வை பொறியாளர் (ஒருங்கிணைப்பு) ஆர். தங்கமணி, மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சக கண்காணிப்புப் பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளச் சேதம் குறித்து சனிக்கிழமை ஆய்வு நடத்தினர்.
விளாத்திகுளம் அருகேயுள்ள குமாரசக்கனாபுரத்தில் மத்திய குழுவைச் சேர்ந்த கே. மனோகரன், ஆர். தங்கமணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய குழுவின் 2-வது பிரிவான நாங்கள் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழை வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளை காலையில் பார்வையிட்டோம். தொடர்ந்து சாலைகளில் ஏற்பட்ட சேதம், பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்துள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்களுக்கு அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளச் சேதப் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் ரூ. 255 கோடி நிதி கோரியுள்ளது. இதில், தாற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக ரூ. 28 கோடி தேவை என தெரிவித்துள்ளனர். அதில் முக்கிய சாலைகளைச் சீரமைக்க ரூ. 16 கோடி, பொதுப் பணித் துறை கால்வாய், குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளைச் சீரமைக்க ரூ. 2 கோடி, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 5 கோடி, ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 2.5 கோடியும் நிதி கோரப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு தமிழக அரசு ரூ. 8 கோடி நிதி வழங்கியுள்ளது. இதில், ரூ. 1.5 கோடி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. மாவட்டத்தில் விவசாயப் பயிர்களுக்கு மட்டும் ரூ. 15 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் கோரியுள்ள நிதியை மத்திய அரசு கொடுக்குமா என்பதை நாங்கள் கூற முடியாது. மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு சேதத்திற்கும் எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என, சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளின் அடிப்படையில் நிதியை மத்திய அரசு வழங்கும்.
மாவட்ட நிர்வாகம் கூறியுள்ள சேத விவரங்கள் உண்மையா என்பதைக் கண்டறியவே நாங்கள் கள ஆய்வு நடத்துகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
மத்திய அரசிடம் தாற்காலிக சீரமைப்பு மற்றும் நிரந்தர சீரமைப்பு என இரண்டு விதமாக நாங்கள் பரிந்துரை செய்வோம்.
தாற்காலிக சீரமைப்புக்கான நிதியை உடனடியாக வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்வோம்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பல இடங்களில் வீடுகளைச் சூழ்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடல் மட்டத்தைவிட தாழ்வாக இருப்பதே இதற்குக் காரணம். எனவே, தூத்துக்குடியில் கழிவுநீர் செல்ல வசதி ஏற்படுத்தும் வகையில் நீண்டகால திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு செய்யவுள்ளோம். பின்னர், சென்னைக்குச் சென்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அளித்துள்ள அறிக்கை தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்துவோம். அதன்பின்பு ஒரு வாரத்துக்குள் எங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் அளிப்போம் என்றனர் அவர்கள்.