சந்தைகளில் அலைமோதும் கூட்டம்: பொங்கல் வியாபாரம் விறுவிறுப்பு

தூத்துக்குடி, ஜன.12:  தூத்துக்குடியில் கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு, வாழைத்தார் உள்ளிட்ட  பொங்கல் பொருள்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. நகரில் உள்ள அனைத்து  சந்தைகளிலும் செவ்வாய்க்கிழமை மக்கள் க

தூத்துக்குடி, ஜன.12:  தூத்துக்குடியில் கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு, வாழைத்தார் உள்ளிட்ட  பொங்கல் பொருள்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. நகரில் உள்ள அனைத்து  சந்தைகளிலும் செவ்வாய்க்கிழமை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இத்துடன் தமிழ்ப் புத்தாண்டும் இணைந்து  கொண்டாடப்படுவதால் கூடுதல் உற்சாகம் காணப்படுகிறது.

 பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புதான் அனைவரின் நினைவிற்கும் வரும். இந்த  ஆண்டும் வழக்கம்போல் தூத்துக்குடியில் திரும்பிய பக்கமெல்லாம் கரும்பு குவியல்களாகக் காட்சி அளிக்கின்றன. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான  லாரிகளில் கரும்புக் கட்டுகள் வந்து குவிந்துள்ளன. அனைத்து முக்கிய சாலைகளிலும்  கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

 10 கரும்புகளைக் கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் 150 வரை விற்பனை  செய்யப்படுகிறது. 15 கரும்புகள் கொண்ட கட்டுகள் ரூ.200 வரை விற்பனையாகின்றன.

 இதேபோன்று மஞ்சள் குலைகள் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், செபத்தையாபுரம் பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வந்துள்ளன. ஒரு மஞ்சள் குலை  ரூ.10 முதல் ரூ.20 வரை தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.

 இதேபோன்று திருச்செந்தூர், உடன்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து  பனங்கிழங்குகள் பெருமளவில் வந்துள்ளன. 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.25  முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது.  தூத்துக்குடி காமராஜ் மொத்த விற்பனை சந்தையில் வாழைத்தார்கள் பெருமளவில்  வந்து குவிந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம், ஏரல், குரும்பூர்,  சாயர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரி லாரியாக வாழைத்தார்கள் வந்து இறங்கின. இந்த வாழைத்தார்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனைக்கு மட்டுமன்றி,  தஞ்சாவூர்,  காரைக்குடி, பழனி, திண்டுக்கல், வத்தலகுண்டு, தாராபுரம், நிலக்கோட்டை, சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் லாரிகள் மூலம்  வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

 வாழைத்தார்கள் ரூ.50-ல் தொடங்கி ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டன.   மேலும், காய்கறி விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலையும்  கடந்த சில நாள்களைவிட செவ்வாய்க்கிழமை 20 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. புதன்கிழமை இது மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் மொத்த சந்தையில் செவ்வாய்க்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோன்று வ.உ.சி. சந்தை, எஸ்.எஸ்.பிள்ளை தெரு சந்தை, மட்டக்கடை பஜார் உள்ளிட்ட அனைத்து சந்தைகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

 மேலும், பொங்கல் வைக்க தேவையான பனை ஓலை, பொங்கல் பூ, பொங்கல்  பானை, அடுப்புக் கல் போன்றவையும் விறுவிறுப்பாக விற்பனையாகின. மொத்தத்தில் தூத்துக்குடி நகரின் அனைத்து பிரதான சாலைகளிலும் மக்கள் கூட்டத்தை அதிகளவில்  காணமுடிந்தது. ஆங்காங்கே கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு, பனை ஓலை  போன்றவை சாலையோரம் குவித்து விற்பனை செய்யப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், கூடுதலாக போக்குவரத்து போலீஸôரை  நியமித்து, போக்குவரத்து சீராக நடைபெற போலீஸôர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com