பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறை

தூத்துக்குடி, ஜன.12: செயல்வழிக் கற்றல் முறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் குழந்தைகளுக்கு  பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு மூலம் பாடங்களைக் கற்பிக்க அனைவருக்கும் கல்வி  இயக்கம் சார்பில் முடிவு செய்யப்ப

தூத்துக்குடி, ஜன.12: செயல்வழிக் கற்றல் முறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் குழந்தைகளுக்கு  பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு மூலம் பாடங்களைக் கற்பிக்க அனைவருக்கும் கல்வி  இயக்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

 அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு  செயல்வழிக் கற்றல் முறையில் கல்வி போதிக்கப்படுகிறது. இந்த முறையில் கரும்பலகை  கல்விக்குப் பதிலாக மாணவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ற வகையிலான அட்டைகளைக்  கொண்டு கல்வி பயின்று வருகின்றனர்.

  இந்த நிலையில் பாடங்களில் உள்ள கதை, பாட்டு போன்றவற்றை மாணவர்களுக்கு  எளிதில் புரியவைக்கும் வகையில் அவற்றை பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு மூலம்  மாணவர்களுக்கு கற்பிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 இதற்காக தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு  மூலம் பாடம் நடத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஆசிரியப் பயிற்றுநர்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் அவர்களுக்கு பயிற்சி  அளிக்கப்பட்டது. அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். இந்த ஆசிரியப் பயிற்றுநர்கள் மாவட்டத்தில்  உள்ள அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.

 அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியப் பயிற்றுநர்கள் கிருஷ்ணன், விஜயா,  ஞான ஜெபமணி, டேவிட் ராஜாமணி ஆகியோர் சென்னை சென்று பயிற்சி பெற்று  வந்தனர்.

 இந்த நிலையில் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பொம்மலாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு  மூலம் பாடம் போதிக்கும் முறை குறித்த பயிற்சி தூத்துக்குடி சி.வ. அரசு  உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னையில் பயிற்சி பெற்று வந்த 4 ஆசிரியப் பயிற்றுநர்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 160 ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.

 பொம்மலாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு மூலம் பாடங்களை மாணவர்களுக்கு எளிமையாக எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் டி. அமிர்தராஜ் ஜெயகரன்,  உதவி திட்ட அலுவலர் டி. முத்துகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

  இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஜன.23ஆம் தேதி இது தொடர்பாக ஒன்றியம் வாரியாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com