வள்ளியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல எம்எல்ஏ கோரிக்கை

வள்ளியூர், ஜன. 12: வள்ளியூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் வள்ளியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என, அப்பாவு எம்எல்ஏ தெரிவித்தார்.   இது தொடர்பாக

வள்ளியூர், ஜன. 12: வள்ளியூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் வள்ளியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என, அப்பாவு எம்எல்ஏ தெரிவித்தார்.

  இது தொடர்பாக அவர் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய மனு:

 திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வளர்ந்துவரும் நகரம். வள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்தோரும் இங்குள்ள ரயில் நிலையத்தைத்தான் பயன்படுத்துகின்றனர்.

 ஆனால் ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்ய 75 கி.மீ. தொலைவு பயணம் செய்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.

  அவர்கள் பண்டிகை, திருவிழா காலங்களில் தத்கல் முறையில் முன்பதிவு செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, வள்ளியூர் ரயில் நிலையத்தில் கணினி வசதியுடன் கூடிய முன்பதிவு மையத்தைத் தொடங்குவதுடன் உடனடியாக பயணச்சீட்டுகளையும் கணினி மூலம் வழங்க வேண்டும்.

  வள்ளியூர் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் முதலாவது நடைமேடையிலிருந்து 2-வது நடைமேடைக்குச் செல்ல சரியான வசதி இல்லாததால், முதியோர், பெண்கள், சிறுவர்கள் சிரமப்படுகின்றனர்.

  எனவே, இங்கு நடைமேடைப் பாலம் அமைக்க வேண்டும். இத் திட்டப் பணிகளை நிறைவேற்றும்வரையில் வள்ளியூர் ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரயில்களும் முதலாம் நடைமேடைப் பகுதியில் நின்று செல்ல வேண்டும்.

  வள்ளியூர் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் அதிவிரைவு வண்டிகள் வள்ளியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை இயங்கும் நாகர்கோவில்-சென்னை அதிவிரைவு வண்டி (எண் 2667, 2668), திருநெல்வேலி-பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி (எண் 2787,2788), கன்னியாகுமரி-ராமேசுவரம் அதிவிரைவு வண்டி (எண்2789, 2790) நாகர்கோவில்-மும்பை அதிவிரைவு வண்டி (எண் 6351ஸ 6352) ஆகியவை வள்ளியூரில் நின்று செல்ல வேண்டும்.

  இக் கோரிக்கைகளை பொதுமக்கள் நலன்கருதி நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் வள்ளியூரில் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com