திருநெல்வேலி, செப். 22: பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் | 1,500 வழங்கக் கோரி திருநெல்வேலியில் இம் மாதம் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) முடிவு செய்துள்ளது.
மாவட்ட பீடி தொழிலாளர் சங்க சிஐடியூ நிர்வாகிகள் கூட்டம் தலைவர் எம். ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலர் ஆர். மோகன், சங்க நிர்வாகிகள் பி. முத்துலட்சுமி, வி. தமிழ்செல்வன், பி.எஸ். மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பீடி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வுக்கான பேச்சு ஓராண்டாக நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இதில் அரசு தலையிட்டு கூலி உயர்வுக்கான பேச்சு தொடங்கும் தேதியை முடிவு செய்து கூலி உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
பீடி தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி நிறுவனம் மூலம் இ.பி.எப். பிடிக்கப்படுகிறது. இதிலிருந்து தொழிலாளர்களுக்கு குறைவான ஓய்வூதியம் கிடைக்கிறது.
பீடி தொழிலாளர்களிடமிருந்து பிடிக்கப்படும் இ.பி.எப். பணத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான ரூபாய் பென்ஷனுக்காக பிடிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
1965-ம் ஆண்டு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றக் கோரியும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் | 1,500 வழங்கக் கோரியும் இம் மாதம் 28-ல் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டமும், பாளையங்கோட்டையில் உள்ள இ.பி.எப். தலைமை அலுவலகம் முன் அக். 19-ம் தேதி ஆர்ப்பாட்டமும் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.