தென்காசி, ஜன.1: தென்காசியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவின் முதல் நாளான சனிக்கிழமை வாகனப் பேரணி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஜன.1 முதல் ஒரு வாரம் சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சாலைப் பாதுகாப்பு இடைவெளியில்லா தொடர்பயணம் என்ற தலைப்பில் இவ்விழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு தென்காசி வட்டாரத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களின் வாகனங்கள் பங்கேற்ற வாகனப் பேரணி நடைபெற்றது.
தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு தொடங்கிய இப்பேரணிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் த.க.முத்துசாமி தலைமை வகித்துப் பேரணியைத் தொடங்கி வைத்தார் (படம்).
தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வேதமாணிக்கம், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க தென்காசிச் செயலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பேரணி, இலஞ்சி விலக்கு, பழைய பேருந்து நிலையம் மற்றும் நான்குரதவீதிகள் வழியாகச் சென்று மேலகரத்தில் முடிவடைந்தது. பேரணியின் போது, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
முன்னதாக மோட்டார் வாகன ஆய்வாளர் இளமுருகன் வரவேற்றார். மனோகரன் நன்றி கூறினார்.