திருநெல்வேலி, ஜன. 1: பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கப்பட உள்ள டென்னிஸ் சிறப்புப் பயிற்சி மேம்பாட்டு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான மாணவ, மாணவிகள் தேர்வு ஜன. 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் டென்னிஸ் சிறப்புப் பயிற்சி மேம்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் மாணவ, மாணவிகள் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான தேர்வு ஜன. 4 ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு, மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 10 மாணவர்கள், 10 மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
தேர்ந்து எடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 25 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். தேர்வில் கலந்து கொள்பவர்கள் 1.1.2011 அன்று 14 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்ந்து எடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் 5 நாள்கள் மாலை மட்டும் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் தினமும் ரூ. 10 மதிப்பிலான சிற்றுண்டியும், போக்குவரத்துக் கட்டணமாக தினமும் ரூ.10-ம் வழங்கப்படும்.
மேலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ரூ. 6,000 மதிப்பிலான சீருடைகள், 2 செட் ஷர்ட்ஸ், டி-சர்ட், ஷு மற்றும் டென்னிஸ் மட்டை வழங்கப்படும்.
அத்துடன் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ரூ. 10,000-ம், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 20,000-ம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும்.
தேர்வில் பங்கேற்க விரும்புவோர் வயதுச் சான்றிதழுடன் ஜன. 4 }ம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளார் அவர்.