நாகர்கோவில், ஜன.22:தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஒன்றரை சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாரத ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் அடிப்படையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வட்டி விகிதத்தை உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த ஆணைப்படி மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளின் வட்டி விகிதங்கள் புத்தாண்டுக்குப் பின் 3-வது முறையாக உயர்த்தப்படுகின்றன.சேமிப்பு கணக்குகளைத் தவிர, நிரந்தர வைப்பு கணக்குகளுக்கு அனைத்து டெபாசிட் கால அளவுகளுக்கும் கூடுதலாக வழங்கப்படும் வட்டி விகிதங்கள் விவரம்: (கடந்த ஆண்டு வட்டி விகிதங்கள் அடைப்புக்குள்):
30 முதல் 45 நாள்களுக்கு 4.5 சதவிகிதம் (3.5), 46 முதல் 90 நாள்களுக்கு 6 (4.5) சதவிகிதம், 91 முதல் 180 நாள்களுக்கு 7 (5.5) சதவிகிதம், 181 முதல் 364 நாள்களுக்கு 8 (6.5) சதவிகிதம், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை 8.5 (7.5) சதவிகிதமும், 2 ஆண்டுகளுக்குமேல் 9 சதவிகிதமும் (8) வட்டி விகிதங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மூத்த குடிமக்களுக்கு ஓராண்டு காலத்துக்கான டெபாசிட்டுகளுக்கு கூடுதல் 0.50 சதவிகிதம் வட்டி வழக்கம்போல வழங்கப்படுகிறது.உயர்த்தப்பட்டுள்ள இந்த வட்டி விகிதங்கள் மாவட்டத்திலுள்ள மத்திய வங்கி கிளைகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் 1.2.2011 முதல் அமலுக்கு வருகின்றன.கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட்டுகளுக்கான வட்டிக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.