தூத்துக்குடி, ஜன. 22: தூத்துக்குடியில் பொங்கலன்று நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார். இதையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள மங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் வே. பரமசிவன் (38). புதுக்கோட்டை அருகேயுள்ள குலையன்கரிசலைச் சேர்ந்தவர் அ. சந்திரேசன் (36). இவர்கள் இருவரும் திருப்பூரில் மளிகைக்கடை நடத்தி வந்தனர்.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் ஆம்னி வேனில் 10 பேர் வந்தனர்.
வேன், தூத்துக்குடி துறைமுக புறவழிச்சாலையில் வந்தபோது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில், ஆம்னி வேனில் பயணம் செய்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் இறந்தனர். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியைச் சேர்ந்த ஜெயம் மகள் சசி (22) என்ற பெண் மறுநாள் இறந்தார். சிகிச்சை பெற்று வந்த குலையன்கரிசலைச் சேர்ந்த அ. சந்திரேசன் (36) சனிக்கிழமை இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.