திருநெல்வேலி, ஜன. 22: அரசுடன் தொமுச செய்து கொண்ட ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு விரோதமானது என்றும் அதை ரத்து செய்யக் கோரியும் வண்ணார்பேட்டையில் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியூ உதவித் தலைவர் பொ. மனோகரன் தலைமை வகித்தார். அண்ணா தொழிற்சங்கப் பேரவைப் பொதுச் செயலர் எம். பொன்னுசாமி, ஏஐடியூசி தலைவர் எல். குருசாமி, எம்.எல்.எப். பொதுச் செயலர் சி. உச்சிமாகாளி, டி.டி.எஸ்.எப். பொதுச் செயலர் எஸ். சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை இணைச் செயலர் ஆர். சங்கரலிங்கம், சிஐடியூ சம்மேளன பொதுச் செயலர் ஏ.பி. அன்பழகன், ஏஐடியூசி சம்மேளன பொதுச் செயலர் ஜெ. லட்சுமணன், பணியாளர் சம்மேளன மாநில பொதுச் செயலர் தி. திருமலைச்சாமி, எம்.எல்.எப். மாநிலப் பொருளாளர் பி. அருணகிரி, தேமுதிக தொழிற்சங்கத் தலைவர் யூ. ராஜேந்திரன், புதிய தமிழகம் தொழிற்சங்கப் பொதுச் செயலர் எம். சந்திரன், ஏஐடியூசி மாநில சம்மேளனச் செயலர் ஆர். ஆறுமுகம், சிஐடியூ மாநில உதவித் தலைவர் எம். ராஜாங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மின்வாரியம் மற்றும் அரசு, ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொமுச செய்த ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு விரோதமானது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.