திருநெல்வேலி, ஜன. 22: முன்விரோதத் தகராறில், விவசாயியைக் கொலை செய்த வழக்கில், மற்றொரு விவசாயி ரா. பேச்சிமுத்துவுக்கு (36) ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
ஊத்துமலை அருகே சோலைச்சேரி ஏசு தெருவைச் சேர்ந்த விவசாயி ராமையா (40). இதே தெருவில் குடியிருந்து வருபவர் பேச்சிமுத்து. பேச்சிமுத்துவின் மனைவி வசந்தி, ராமையா வீட்டுக்கு அடிக்கடிச் சென்று அவரது மனைவி கலாவுடன் பீடி சுற்றி வந்தாராம்.
வீட்டுக்கு வந்த வசந்தியிடம் ராமைய்யா பேசியுள்ளார். இது பேச்சிமுத்துவுக்குப் பிடிக்கவில்லையாம். இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 23.4.2009 இரவு ராமையா வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த பேச்சிமுத்து, கட்டையால் ராமையாவின் தலையில் அடித்துள்ளார்.
பலத்தக் காயமடைந்த ராமையா திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் இறந்து விட்டார். இதுகுறித்து ஊத்துமலை போலீஸôர் கொலை வழக்குப் பதிவு செய்து பேச்சிமுத்துவைக் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருநெல்வேலி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி எம். விஜயராகவன் விசாரித்து, பேச்சிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.