திருநெல்வேலி, ஜூலை 3: திருநெல்வேலியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி பூதத்தார் முக்கு வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் எம். அருணாச்சலம் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். முகமது கான் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தின்போது, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருநெல்வேலியில் உள்ள கால்வாய்களையும், குளங்களையும் தூர்வாரச் செய்து விவசாயிகளுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கிலி பூதத்தார் கோயில் அருகில் மின் கம்பங்களில் சோடியம் மின்விளக்கு பொருத்த வேண்டும். வெளியூர்களில் இருந்து லாரி மூலமாக வரும் சரக்குகளை கடை திறந்த பிறகு இறக்குமாறு லாரி உரிமையாளர்களை கேட்டுக் கொள்வது.
ஆனித் தேரோட்டம் நடைபெறும் நாளான 12.7.11 அன்று அனைத்து கடைகளையும் அடைத்து தேரை ஒரே நாளில் நிலையில் சேர்க்க முயற்சிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றன. சங்க பொருளாளர் எஸ்.பி. மாயாண்டி நன்றி கூறினார்.