தூத்துக்குடி-கோவை இணைப்பு ரயில்: மலர் தோரணங்களுடன் புறப்பட்டது

தூத்துக்குடி, ஜூலை 3:   தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு முதல் ரயில் சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.   இந்த ரயிலுக்கு வாழைத் தோரணங்கள் கட்டி, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தூத்துக்குடி நகர மக்க
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி, ஜூலை 3:   தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு முதல் ரயில் சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.

  இந்த ரயிலுக்கு வாழைத் தோரணங்கள் கட்டி, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தூத்துக்குடி நகர மக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

 தூத்துக்குடி- கோவை இடையே ஏற்கெனவே ரயில் போக்குவரத்து நீண்ட காலம் மீட்டர்கேஜ் பாதையில் நடைபெற்று வந்தது. இந்த ரயில் போக்குவரத்து அகலப் பாதையாக மாற்றப்பட்ட பிறகு கடந்த 1987-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

 இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

 இது தொடர்பாக பயணிகள் நலச்சங்கம், தொழில் வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தன.

 இதைத் தொடர்ந்து தூத்துக்குடி- கோவை இடையே இணைப்பு ரயில் விடப்படும் என கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில் ஜூலை 1-ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி 16611 என்ற எண் கொண்ட கோவை- தூத்துக்குடி இணைப்பு ரயில் கடந்த 1-ம் தேதி இரவு 8.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டது.

இந்த ரயில் சனிக்கிழமை காலை 5.50 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.

 6 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலின் முதல் பயணத்தில் சுமார் 450 பயணிகள் தூத்துக்குடி வந்தனர். அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 இதைத் தொடர்ந்து வண்டி எண். 16612  தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

 நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதைத் தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த தூத்துக்குடி நகர மக்கள் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு புறப்பட்டுச் சென்ற முதல் ரயிலை  உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

 நிகழ்ச்சியில், ரயில் நிலைய மேலாளர் லயோனன், மாவட்ட பயணிகள் நலச் சங்கத் தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலர் எம். பிரமநாயகம், பொருளாளர் லட்சுமணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.பி.சி.வீ. சண்முகம், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ராஜு, ரொனால்டு வில்லவராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.