மன்னராட்சி காலத்தில் வழங்கிய நிலங்கள் அபகரிப்பு தூக்குத்தண்டனை நிறைவேற்றியவர்களின் வாரிசுகள் அவதி

நாகர்கோவில், ஜூலை  3:  கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னராட்சி காலத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய ஆர்ச்சாரியர்களுக்கு (தூக்கிலிடுவோர்) மன்னர்கள் வழங்கிய நிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஆர
Published on
Updated on
2 min read

நாகர்கோவில், ஜூலை  3:  கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னராட்சி காலத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய ஆர்ச்சாரியர்களுக்கு (தூக்கிலிடுவோர்) மன்னர்கள் வழங்கிய நிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஆர்ச்சாரியர்களின் வாரிசுகள் இப்போது வறுமையில் வாடுகிறார்கள். தங்களுக்கு நியாயம் கிடைக்க அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இம் மாவட்ட நிலப்பரப்பு மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்தபோது குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 தேசிய பாரம்பரிய கலை மற்றும் கலாசார அறக்கட்டளையின் (இன்டாக்) நாகர்கோவில் கிளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.

 கி.பி. 1800-க்கு முன் இப்போது உள்ளதுபோல நீதிமன்றங்களோ, வழக்கறிஞர்களோ கிடையாது. கொலை, கற்பழிப்பு, ராஜ துரோகம், உளவு போன்ற குற்றங்களுக்கு ராஜாவும், அவருடைய அமைச்சர்களும், குறுநில மன்னர்களும் ராஜசபைகளில் நேரடியாக விசாரணை நடத்தி தீர்ப்புக் கூறியுள்ளனர்.

 இப்போது மாவட்டந்தோறும் சிறைகள் இருப்பதுபோல அப்போது பெரிய சிறைச் சாலைகளும் கிடையாது. எனவே, தண்டனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன. பெரும் குற்றம் செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

 தூக்குத் தண்டனைகள் கழுவன்திட்டை என்ற இடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் பால்பண்ணை அருகே இப்போது இசக்கியம்மன் கோயில் இருக்கும் இடம்தான் கழுவன்திட்டை என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

 அங்கு ஒரு பாழடைந்த கிணறு காணப்பட்டது. அதையொட்டி இரு தடித்தத் தூண்களும், அதன் நடுவில் ஒரு பலமான மரக்கம்பும் அதன் நடுவில் தூக்குக் கயிறும் கட்டப்பட்டிருந்தது.

 அந்தக் கிணற்றின்மேல் அமைக்கப்பட்ட இந்த தூக்குமேடையில் தூக்குத் தண்டனை கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்குமுன்பு வரை இங்கு தூக்குமரம் காணப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

 இந்த தூக்குமரம் மூலம் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்கள்தான் ஆர்ச்சாரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது தொழிலுக்கு ஊதியமாகவும், சலுகைகளாகவும் பணம், பொருள்கள், நிலங்களை அரசர்கள் வழங்கி வந்துள்ளனர்.

 பெரும்பாலும் இத் தொழிலுக்காக ஏக்கர் கணக்கில் நிலங்களை அரசர்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இவர்களது வசம் இருந்தது.

 இந்த நிலங்களை இவர்களும், இவர்களது சந்ததியாரும் அனுபவிக்கலாம். ஆனால், தனியாக விற்க முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

 நாளடைவில் இந்த நிலங்களை அறக்கட்டளையின் சொத்தாக மாற்றி, அறக்கட்டளைக்குத் தலைவரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் அச் சொத்துக்களை மற்ற சமுதாய மக்களுக்கு விற்றுவிட்டனர்.

 பல நிலங்கள் 90 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆர்ச்சாரியர் சொத்துக்கள் காலப்போக்கில் பலரது கை மாறிப்போனது.

 பணம் படைத்த பலரும் ஆர்ச்சாரியர் நிலத்தை அபகரித்து நீதிமன்றங்களுக்குச் சென்று வெற்றிபெற்றிருக்கிறார்கள். இதனால், அரசர்கள் வழங்கிய நிலங்கள் ஆர்ச்சாரியர்களின் வாரிசுகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ச்சாரியர்களின் வாரிசுகள் விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். பலர் தொழில்நிமித்தம் இங்கிருந்து இடம்பெயர்ந்துச் சென்றுவிட்டார்கள்.

 இவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நீதிமன்றங்களில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு பணம் செலவிட முடியாத ஏழ்மையில் இவர்கள் இருக்கிறார்கள்.

 இது தொடர்பாக இன்டாக் அமைப்பின் நாகர்கோவில் கிளை அமைப்பாளர் ஆர். எஸ். லால்மோகன் கூறியதாவது:

 நாகர்கோவிலில் ஏற்படுத்தப்பட்டிருந்த தூக்கு மேடையில் 1905-ம் ஆண்டு வரை கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.  

 ஆர்ச்சாரியர்களுக்கு அரசர்கள் வழங்கிய நிலங்கள் இப்போது அவர்களது வாரிசுகள் கைகளில் இல்லை.

 பார்வதிபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெருவிளை குளத்தின் கரையிலுள்ள நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. விவசாயத்தை நம்பி வாழும் நிர்கதியற்ற இவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்காட பணம் கிடையாது. இவர்களின் தொழிலும் இன்று கிடையாது.

 இவர்களுக்கு கொடுக்கப்பட்ட செழிப்பான நன்செய், புன்செய் நிலங்கள் இவர்களது கையைவிட்டு போய்விட்டது. இவர்களது நிலம் இப்போது பணம் படைத்தவர்களிடம் உள்ளது. இதை மீட்க அவர்களுக்கு வழி தெரியவில்லை என்றார் லால்மோகன்.

 செண்பகராமன்புதூரில் வசிக்கும் ஆர்ச்சாரியர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ராமநாதபிள்ளை (77) கூறுகையில், எனது பாட்டனார் ராமநாதபிள்ளை தூக்கிலிடும் தொழிலை செய்திருக்கிறார். அவரது பெயரே எனக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.

 ஆர்ச்சாரியர்களின் வாரிசுதாரர்கள் இம்மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், பீமநகரி உள்ளிட்ட இடங்களில் இருக்கிறார்கள். மன்னராட்சியின்போது ஆரல்வாய்மொழி நெசவாளர் காலனி, பெருவிளை, பீமநகரி, நாகர்கோவில் வடசேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ச்சாரியர்களுக்கு நிலஙிகள் அளிக்கப்பட்டிருந்தன.

 அவை இப்போது எங்களது கைகளில் இல்லை. அன்று அரசர் எங்கள் சமுதாயத்தவரை ஆதரித்தார்.

ஆனால், இன்று எங்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்டுவிட்டது. எங்களை நிர்மூலமாக்கிவிட்டனர். பல நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், வழக்கு நடத்த காசு கிடையாது. வறுமையில் வாடும் எங்களுக்கு அரசுதான் உதவ வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.