திருநெல்வேலி, ஜூலை 3: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் மேலப்பாளையம் கிளை சார்பில், மண்டல அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பி.ஏ. முகமது அசன் தொழுகை நடத்தினார்.
இஸ்லாமிய மார்க்கப்படி மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதாகவும், அந்த அடிப்படையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டதாகவும் தொழுகையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலி, செயலர் கே.ஏ. செய்யது அலி, பொருளாளர் நேஷனல், மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக்குழு பொருளாளர் இப்ராஹிம், நகரத் தலைவர் எஸ். ரோசன், நகரச் செயலர் சிராஜ், பொருளாளர் முகமது நிவாஸ் உள்ளிட்டோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.
மேலும், சிறப்புத் தொழுகையில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.