திருநெல்வேலி, ஜூலை 9:÷திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பருவத் தேர்வுகளில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு ஜூலை 22ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து இப் பல்கலைக்கழக தேர்வாணையர் கேஎஸ்பி. துரைராஜ், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இப் பல்கலைக்கழகத்தில் 2008-2009 (எம்.சி.ஏ. பாடப்பிரிவு) மற்றும் 2009-2010 ஆம் ஆண்டில் முதுநிலை கலை மற்றும் அறிவியல் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் பயின்ற மாணவர்களில் ஏப்ரல் 2011-ல் நடைபெற்ற நான்காம், ஆறாம் பருவத் தேர்வில் முழுமையாகத் தேர்ச்சி பெற்று ஒன்று முதல் மூன்றாம், ஐந்தாம் பருவத் தேர்வு வரையிலான பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்வு பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடைபெறுகிறது. அதுபோல் ஒன்று முதல் மூன்றாம், ஐந்தாம் பருவத் தேர்வில் முழுமையாகத் தேர்ச்சி பெற்று நான்காம், ஆறாம் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் சிறப்புத் தேர்வு ஜூலை 22ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வு கட்டணம் ரூ. 500.
இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளில் தேர்வு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று முறையாக பூர்த்தி செய்து தேர்வுக் கட்டணத்தை "பதிவாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் திருநெல்வேலியில் மாற்றத்தக்கதான வரைவோலையாக எடுத்து ஜூலை 15ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு தேர்வாணையர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சிறப்புத் தேர்வுகள் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே நடத்தப்படும். அனுமதிச் சீட்டு மாணவ-மாணவிகளுக்குத் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார் அவர்.