திருநெல்வேலி, ஜூலை 9: பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என பணிநிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கம் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட பணிநிறைவு தமிழ்நாடு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் சிங்காரம் முனிரத்னம் முன்னிலை வகித்தார்.
இச்சங்கத்தின் மாவட்ட புதிய தலைவராக கே. முத்துசாமி, துணைத் தலைவராக அடைக்கலம், செயலராக புத்திசிகாமணி, இணைச் செயலராக முத்தையா, பொருளாளராக மருதநாயகம் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஓய்வு பெறும் நாளில் அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை கோப்புகள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ-க்கு அடிப்படை ஊதியம் ரூ. 37,400 மற்றும் தர ஊதியம் ரூ.8,700 மற்றும் துணை ஆட்சியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 26,500 மற்றும் தர ஊதியம் ரூ. 7,600 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.