தக்கலை, ஜூலை 9: கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்ததாக இருவரை போலீஸôர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 32 ஆயிரத்து 610 மற்றும் சான்றிதழ்களையும் பறிமுதல் செய்தனர்.
தக்கலையிலுள்ள கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் வாங்க வெள்ளிக்கிழமை ஏராளமானோர் நின்றுகொண்டிருந்தனராம்.
அலுவலகத்தில் இடைத்தரகர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்ற அறிவிப்பும் உள்ளது. இந்நிலையில், திக்கணங்கோடு தாராவிளையைச் சேர்ந்த தவசிமணி (35), கடியபட்டணத்தைச் சேர்ந்த நசரேயன் (57) ஆகியோர் அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்தனராம்.
இதைக் கவனித்த வட்டாட்சியர் பவானி ஸ்ரீஜா இருவரையும் வெளியே செல்லுமாறு கூறினாராம். ஆனால் அவர்கள் வெளியே செல்லாமல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனராம்.
தகவலறிந்து, தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீஸôர் வந்து தவசிமணி மற்றும் நசரேயன் ஆகியோரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனராம். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சான்றிதழ்கள் வாங்கித் தருவதற்காக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்தது தெரியவந்தது. மேலும் இருவரிடமிருந்து 19 வருமானச் சான்றிதழ்கள், 9 இருப்பிடச் சான்றிதழ்கள், 5 ரேஷன் அட்டைகள், சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்த 5 மனுக்கள் மற்றும் ரூ. 32 ஆயிரத்து 610 ஆகியவற்றை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.