தூத்துக்குடி, ஜூலை 9: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா இம்மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 11 நாள்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா இம்மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெறும். முன்னதாக 25-ம் தேதி மாலை கொடி பவனி நடைபெறுகிறது. 6-ம் திருவிழாவான ஜூலை 31-ம் தேதி காலை ஆயர் தலைமையில் புதுநன்மை சிறப்பு திருப்பலியும், மாலையில் நற்கருணை பவனியும் நடைபெறும். ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 7 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், அதனை தொடர்ந்து பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும் நடைபெறும். 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறும். பகல் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ தலைமையில் திருப்பலியும் நடைபெறும்.