உடன்குடி, ஜூலை 9: உடன்குடி அருகே கந்து வட்டி கேட்டு வியாபாரி வீட்டை அபகரித்ததாக இளைஞர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.
மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்சிங் (57) இறைச்சி வியாபாரி. இவர் 2003-ம் ஆண்டு வள்ளியம்மாள்புரம் ஜெகதீசனிடம் (37) ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினாராம்.
அதற்கு வட்டியாக மாதம் ரூ. 1,500 செலுத்தி வந்தாராம்.
ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு கடன் வாங்கியதற்கு ஆதாரமாக சுந்தர்சிங் வீட்டை எழுதி வாங்கிக் கொண்டாராம்.
இந்நிலையில் ஜெகதீசன், சுந்தர்சிங் வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ய முயன்றதாகத் தெரிகிறது.
இதனை அறிந்த சுந்தர்சிங், அவர் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தாராம். ஆனால் ஜெகதீசன் அதை வாங்க மறுத்து கூடுதலாக ரூ 2 லட்சம் கேட்டாராம்.
இது குறித்து சுந்தர்சிங் மெஞ்ஞானபுரம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து, ஜெகதீசனை தேடி வருகிறார்.