திருநெல்வேலி, ஜூலை 14: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்கு பத்தமடையில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறுகிறது. இதற்காக, 15 நாள் பரோலில் வியாழக்கிழமை அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையைச் சேர்ந்தவர் ஷேக் சிந்தா மதார் (30). கடந்த 1999-ம் ஆண்டு திருச்சி உறையூரில் மருத்துவர் ஸ்ரீதர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஷேக் சிந்தா மதாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷேக் சிந்தா மதாருக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதற்கு ஷேக் சிந்தா மதாரும் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து, ஷேக் சிந்தா மதார் தரப்பில் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் 14.7.11 முதல் 15 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஷேக் சிந்தா மதார் வியாழக்கிழமை பிற்பகல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
உறவினர்களுடன் பத்தமடை சென்ற ஷேக் சிந்தா மதாருக்கு வெள்ளிக்கிழமை காலை திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி பத்தமடையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.