தக்கலை, ஜூலை 14:÷கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் அரண்மனையிலும் கேரள அரசு ஆய்வு நடத்த வேண்டும் என பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஏ.பி.முகமதுராபி வலியுறுத்தியுள்ளார்.
÷இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
÷திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட ரகசிய அறைகளை திறந்து பார்த்தபோது பல லட்சம் கோடி விலை மதிக்கத்தக்க தங்க ஆபரணங்கள், தங்கக் காசுகள், ஐம்பொன் சிலைகள், முத்து, பவளம், வைடூரியம் என விலைமதிப்புமிக்க பொருள்கள் கிடைத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
÷மார்த்தாண்ட வர்மா மகாராஜா கேரளத்தை ஆண்டபோது அவருடைய அரண்மனையும், கருவூலமும், கஜானாவும் பத்மநாபபுரத்தில் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
÷ராஜ குடும்பத்தினர் பத்மநாபபுரம் அரண்மனையை காலி செய்து திருவனந்தபுரத்தில் குடியேறினர். ஆனால் இன்றும் பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.
÷பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னர்கள் காலத்துக்குப் பிறகு திறக்கப்படாத அறைகளும், கஜானாவும், சுரங்கப்பாதைகளும் உள்ளன.
÷பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள கருவூலத்திலும், கஜானாவிலும், சுரங்கப்பாதை எனக் கூறப்படும் இடங்களிலும் விலைமதிப்புமிக்க தங்க ஆபரணங்கள் இருக்கலாம்.
÷எனவே பத்மநாபபுரம் அரண்மனையை ஆய்வு செய்ய கேரள தொல்பொருள் ஆராய்ச்சி மையமும், கேரள அரசும் முயல வேண்டும்.
÷மேலும் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் கிடைத்த தங்க ஆபரணங்களை ராஜ குடும்பத்தினரின் ஒப்புதலுடன் கேரள மக்களின் நலனுக்கும், வளர்ச்சிக்கும்
பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.