நாகர்கோவில், ஜூலை 14:÷கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலக் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆஷிஷ்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
÷தக்கலை - தடிக்காரன்கோணம் சாலையில் முட்டைக்காடு பகுதியில் ரூ.30 லட்சத்தில் சிறுபாலம் கட்டும் பணி, குளச்சல் - திருவட்டார் சாலையில் திருவட்டார் பகுதியில் பரளியாற்றின் குறுக்கே ரூ.1.89 கோடி செலவில் தரைநிலைப் பாலத்தை மேல்நிலைப் பாலமாக மாற்றும் பணி, ஆரல்வாய்மொழி- நெடுமாங்காடு சாலையில் ஆண்டித்தோப்பு பகுதியில் கால்வாயின் குறுக்கே ரூ.1.99 கோடியில் உயர்நிலைப் பாலம் கட்டும் பணி, நாகர்கோவில் அருகே புத்தேரியில் ரூ.21.4 கோடியில் புத்தேரி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது:
÷முட்டைக்காடு சிறுபாலப் பணிகள் இம்மாதத்துக்குள்ளும், ஆண்டித்தோப்பு பாலப் பணி ஒரு மாத காலத்துக்குள்ளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
÷திருவட்டார் பாலம் மற்றும் புத்தேரி ரயில்வே மேம்பாலப் பணிகளை ஒப்பந்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
÷நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அனந்தசேனன், உதவி கோட்டப் பொறியாளர்கள் பாஸ்கர், ஹெலன் ஜெனட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் த. ஹரிராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.