ஆறுமுகனேரி, ஜூலை 30: தாமிரபரணி ஆறு வங்கக்கடலில் சங்கமிக்கும் சங்கு முக தீர்த்தத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தாமிரபரணி ஆறு மூன்று பகுதிகளாகப் பிரிந்து பின்னர் பழையகாயல் அருகில் வங்கக்கடலில் சங்கமிக்கிறது. இதனை சங்கு முக தீர்த்தம் என பக்தர்கள் அழைக்கின்றனர்.
பழையகாயலிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள சங்கு முக தீர்த்தத்திற்கு நடந்துதான் மூன்று முறை ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
இதனை புனித பயணம் போன்று பக்தர்கள் எண்ணி நடந்து சென்று, அங்கு புனித நீராடி கரையிலிருக்கும் விநாயகரை தரிசித்தனர். மேலும் தீர்த்தக்கரையில் தர்ப்பணமும் செய்தனர்.
ராஜபதி கோயிலில் சிறப்பு வழிபாடு: குரும்பூர் அருகிலுள்ள ராஜபதி செüந்திரநாயகி அம்மன் சமேத ஸ்ரீகைலாச நாதர் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன.