களியக்காவிளை,ஜூலை 30: களியக்காவிளையில் திமுக பேச்சாளரை கைது செய்யக் கோரி சனிக்கிழமை அதிமுக,காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
களியக்காவிளையில், திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து திமுக பேச்சாளர் வாகை முத்தழகன் பேசியதற்கு ஆட்சேபம் தெரிவித்து, விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக பொறுப்பாளர் உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் களியக்காவிளை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, அங்கு வந்த தக்கலை டி.எஸ்.பி. சுந்தர்ராஜன், திமுக பேச்சாளர் மீது நடவடிக்கைஎடுப்பதாக கூறியதையடுத்து அதிமுகவினர் சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி குறித்து வாகைமுத்தழகன் பேசியதாகவும், அவரைக் கைது செய்யக் கோரியும், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ் தலைமையில் காங்கிரஸôர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.