Enable Javscript for better performance
குமரி மாவட்டத்தில் 19, 20- ல் சிவாலய ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரம், பிப். 11: கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலய ஓட்ட நிகழ்ச்சி இம்மாதம் 19 மற்றும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

      இந்நிலையில், கோயில்கள் பராமரிப்பு மற்றும் விழா முன்னேற்பாடுகள் குறித்து தேவசம் போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

      சிவராத்திரியை முன்னிட்டு இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலாய ஓட்டம் நிகழ்ச்சி நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.   

      ஆதிகாலத்தில் பக்தர்கள் ஓட்டமாக ஓடிய இந்நிகழ்ச்சி, இப்போது வாகனங்களில் செல்லும் அளவுக்கு நவீனத்துவம் பெற்றுள்ளது.

      சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் முன்சிறை அருகேயுள்ள திருமலை சிவாலயத்திலிருந்து ஓடத் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருநட்டாலம் என 12 சிவாலயத் திருத்தலங்களில் கோபாலா, கோவிந்தா என்ற நாமம் உச்சரித்தவாறு சென்று, அங்குள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டுச் செல்கின்றனர்.   

      இந்திய அளவில் பிரபலமடைந்து வரும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க ஆண்டுதோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கடந்த ஆண்டு தென்தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர்.

      இத்தனை சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சிக்கு, தேவையான முன்னேற்பாடுகளை தேவசம் போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய முக்கியத்துவம் அளித்து செய்யவில்லையென பக்தர்கள் தரப்பிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.   குறிப்பாக, மாவட்டத்தில் மண்டைக்காடு உள்ளிட்ட கோயில் விழாக்களையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன.

      ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் சிவாலய ஓட்ட நிகழ்ச்சிக்கு கோயில்கள் மற்றும் கோயில் குளங்களைச் சுத்தப்படுத்துதல், போக்குவரத்து வழிகாட்டுதல், சிறப்பு பஸ் வசதி, தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகளைச் செய்தல் போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட தேவசம் போர்டு செய்வதில்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

      இது குறித்து, பொன்மனை சிவாலய பக்தர் சங்கச் செயலர் எம். ஐயப்பன் கூறியதாவது:

      இம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலய ஓட்டத்துக்குத் தேவையான முக்கியத்துவத்தை தேசவம் போர்டு அளிப்பதில்லை.

     சிவாலய ஓட்டத்தின்போது பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை எடுத்துக் கொள்வதிலேயே தேவசம் போர்டு அலுவலர்கள் கவனமாக இருக்கின்றனர்.

      கோயில்களை வர்ணம் பூசி சுத்தம் செய்தல், கோயில் குளங்களைப் பராமரித்தல் போன்றவற்றைச் செய்வதில்லை.

     முன்காலங்களில் பக்தர்களுக்கு இளநீரும், பழமும் தேவசம் போர்டு சார்பில் வழங்கப்பட்டன.

     இப்போது தண்ணீர்கூட தருவதில்லை.

     கோயில் குளங்களில் பக்தர்கள் குளித்துவிட்டு தரிசனம் செய்யும் முறை முன்னர் இருந்தது.

      இப்போது உள்ள நிலையில், பக்தர்கள் கோயில் குளங்களில் முகம் மற்றும் கை, கால்களை அலம்பிவிட்டு சுவாமி தரிசனம் செய்ய நினைக்கின்றனர்.

     ஆனால் அதற்குகூட முடியாத அளவில் குளங்களில் தண்ணீர் சேறு படிந்த நிலையில் சுகாதாரமற்றுக் காணப்படுகிறது.

      எனவே, இந்நிலைகளை மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தேவசம் போர்டும் இணைந்து பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai