Enable Javscript for better performance
அறிவியலின் தொட்டிலாக உள்ளது சங்க இலக்கியம்: கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி- Dinamani

சுடச்சுட

  

  அறிவியலின் தொட்டிலாக உள்ளது சங்க இலக்கியம்: கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி

  By DIN  |   Published on : 20th December 2018 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சங்க இலக்கியம் அறிவியலின் தொட்டிலாக உள்ளது என்றார் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி.
  பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் "தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றார். கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி கருத்தரங்கைத் தொடங்கிவைத்து "தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்' என்ற ஆய்வுக் கோவையை வெளியிட்டுத் தலைமை உரையாற்றினார்.  
  கல்லூரியின் முதல்வர் மு. முஹம்மது சாதிக் வாழ்த்திப் பேசினார்.  ஆட்சிக் குழுத் தலைவர்  பி.எஸ்.ஏ. பல்லாக் லெப்பை, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கே.ஏ. மீரான் மைதீன், பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன் மற்றும் அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் ஏ. அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதக்கத் ஆய்விதழின் முதன்மையாசிரியர் எஸ். முகம்மது ஹனீப் ஆய்வுரை நிகழ்த்தினார். 
  புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உதவி இயக்குநரும் கவிஞருமான ஆண்டாள் பிரியதர்ஷினி "தமிழ்க் கவிதைகளில் அறிவியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் பேசியதாவது: 
  சங்க இலக்கியம் அறிவியலின் தொட்டிலாக உள்ளது. தமிழ் கவிதைகள் பண்பாட்டை உள்ளடக்கியதாக அமைகின்றன. மனிதத்தை தொலைத்த அறிவியலால் எந்தப் பயனும் இல்லை. தொல்காப்பியம் ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களைப் பட்டியலிடுகிறது. ஆண்டாளின் திருப்பாவையில் மழை குறித்த பதிவுகள் மிகத் தெளிவாகவுள்ளன. சித்தர் பாடல்கள் பொருள் பொதிந்தனவாக உள்ளன. பழந்தமிழ் இலக்கியத்தில் புஷ்பக விமானம் குறித்த கருத்துகளைப் பார்க்க முடிகிறது. தமிழர் வாழ்வியல் அறிவியல் சார்ந்த வாழ்வியலாக அமைந்ததன் காரணம் பண்பாட்டுத் தொடர்ச்சியும் தொன்மையுமே ஆகும். அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித உறவுகளின் மாண்புகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்றார் அவர். 
  முன்னதாக நெய்தல் ஆய்வாளர்  வஹீதையா கான்ஸ்தந்தின் தொடக்க உரையாற்றினார். இலங்கை மருத்துவ அலுவலர்கள் முருகமூர்த்தி துஷ்யந்தன், கலைச்செல்வி துஷ்யந்தன் ஆகியோர் "அறிவியல் பார்வையில் தமிழ் மருத்துவம்' என்ற தலைப்பில் நோக்கவுரையாற்றினர். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு. அயூப்கான் அறிமுகவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து அமர்வுகள் நடைபெற்றன.
  முதலாம் அமர்வில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வாளர் ரஹ்மத் ராஜகுமாரன்,   "இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் அறிவியல் பார்வை' என்ற பொருளிலும், இரண்டாம் அமர்வில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஜான் பிரதாப் குமார் "காடுகளில் கற்றவை' என்ற பொருளிலும், மூன்றாம் அமர்வில் அறிவியல் புல முதன்மையர் சே.மு. அப்துல் காதர் "அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள்' என்ற பொருளிலும் சிறப்புரையாற்றினர். 
  சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சு. சதாசிவம் "பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளும் தொடர்ச்சியும்' என்ற பொருளில் நிறைவுரையாற்றினார். அரசுதவி பெறாப் பாட வகுப்புகளின் தமிழ்த்துறைத் தலைவர்  எம். சாதிக் அலி நன்றி கூறினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai