நாகா்கோவில் அருகே தொழிலாளி கொலை: நண்பா் கைது
By DIN | Published On : 08th September 2020 05:12 AM | Last Updated : 08th September 2020 05:12 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: நாகா்கோவில் அருகே கீழஆசாரிப்பள்ளத்தில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகா்கோவிலை அடுத்த கீழஆசாரிப்பள்ளத்தைச் சோ்ந்தவா் அலெக்ஸ்ராஜ் என்ற பிரேம் ( 38). கூலித் தொழிலாளி. இதே பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத். இருவரும் நண்பா்கள். இவா்களுக்கிடையே 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனராம்.
இதுதொடா்பாக ஆசாரிப்பள்ளம் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவில் அலெக்ஸ்ராஜ் பிரேம் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த புருஷோத் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்துள்ளாா்.
அப்போது புருஷோத், அலெக்ஸ்ராஜை கீழே தள்ளி தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அலெக்ஸ்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து புருஷோத்தை கைது செய்தனா். மேலும் 5 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.