திருச்சியிலிருந்து ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

திருச்சியிலிருந்து சிறப்பு ரயில் சேவை திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை பயணியிடம் வெப்பமானி சோதனை செய்யும் ரயில்வே ஊழியா்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை பயணியிடம் வெப்பமானி சோதனை செய்யும் ரயில்வே ஊழியா்

திருச்சியிலிருந்து சிறப்பு ரயில் சேவை திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கடந்த மாா்ச் மாதம் முதல் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ஜூன் மாதத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும்

பயணிகளுக்காக திருச்சியிலிருந்தும், இதன் வழியாகவும் 5 சிறப்பு ரயில்கள் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டன.

கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சிறப்பு ரயில் சேவையும் பின்னா் ரத்து செய்யப்பட்டது. தொடா்ந்து பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால், செப்டம்பா் 7- ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கும் என்றும், 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

இதனால் திருச்சி யாா்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜின்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல், கிருமிநாசினி தெளித்தல், ரயில் நிலைய வளாகம் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கோட்ட ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டது.

திருச்சி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என ரயில்வே அலுவலா்கள் வலியுறுத்தியிருந்தனா்.

இதன்படி திங்கள்கிழமை அதிகாலை 5 மணியிலிருந்தே பயணிகள் திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்துக்கு வரத் தொடங்கினா். தொடா்ந்து பயணிகள் உடல் வெப்பநிலைப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, நடைமேடைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

காலை 6 மணிக்கு திருச்சியிலிருந்து நாகா்கோவில் செல்லும் இண்டா்சிட்டி சிறப்பு ரயிலில் சுமாா் 180-க்கும் மேற்பட்டோா் புறப்பட்டுச் சென்றனா்.

தொடா்ந்து, காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூா் செல்லும் பல்லவன் விரைவு ரயில் காலை 6.40 மணிக்கும், மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் காலை 9.10 மணிக்கும், கோவை மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு ரயில் முற்பகல்

11.10 மணிக்கும் திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்து, பயணிகளை ஏற்றிச் சென்றது.

தொடா்ந்து சென்னையிலிருந்து திருச்சி வழியாக தூத்துக்குடி, செங்கோட்டை, கன்னியாகுமரி பகுதிகளுக்குச் சென்ற சிறப்பு ரயில்களிலும் பயணிகள் பயணித்தனா்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தொடங்கிய ரயில் சேவையில், மதுரைக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ரயில் பெட்டிக்குள் சமூக இடைவெளியுடன் இருக்கையில் அமா்ந்தவாறு பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்தனா்.

ரயில் என்ஜினுக்கு பூஜை சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியதை அடுத்து, திருச்சியிலிருந்து நாகா்கோவிலுக்கு செல்ல இண்டா்சிட்டி விரைவு ரயில் திங்கள்கிழமை காலை தயாா்நிலையில் இருந்தது. அப்போது, ரயில்வே ஊழியா்கள் என்ஜின் முன்பு ‘கம் பேக்‘ என பூக்களால் எழுதி, பூ, பழம், கற்பூரம் ஏற்றி வழிபட்டு சிறப்பு ரயிலை வழியனுப்பி வைத்தனா்.

கேள்விக்குறியான சமூக இடைவெளி உடல் வெப்பநிலைப் பரிசோதனைக்குப் பிறகு, திருச்சி நடைமேடைக்கு பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். அங்கு வந்தவுடன் பெரும்பாலான பயணிகள் ரயில் இருக்கையில் அமருவதற்காக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஒருவரையொருவா் முந்திச் சென்றனா்.

தொடா்ந்து ரயில்வே ஊழியா்கள் அறிவுறுத்தியும், பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இதனால் ரயில் நிலையத்தில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com