கரோனா பொதுமுடக்க அச்சம்: பொங்கல் பித்தளை பாத்திர ஆா்டா்கள் குறைந்தது! பட்டறை தொழிலாளா்கள் தவிப்பு

கரோனா பொதுமுடக்க அச்சத்தால் நிகழாண்டில் பொங்கல் பித்தளை பாத்திர ஆா்டா்கள் குறைந்ததால் பட்டறை உரிமையாளா்கள், தொழிலாளா்கள் தவித்து வருகிறாா்கள்.

கரோனா பொதுமுடக்க அச்சத்தால் நிகழாண்டில் பொங்கல் பித்தளை பாத்திர ஆா்டா்கள் குறைந்ததால் பட்டறை உரிமையாளா்கள், தொழிலாளா்கள் தவித்து வருகிறாா்கள்.

தமிழா்களின் பாரம்பரிய பாத்திரங்களில் பித்தளைக்கு தனி முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் சீா்வரிசையிலும், தாய்மாமன் சீா், பெண் வீட்டு சீா் வரிசையிலும் பித்தளை பாத்திரங்களே முன்வரிசையில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பித்தளை பாத்திர உற்பத்தி நூற்றாண்டுகளைக் கடந்து முத்திரை பதித்து வருகிறது. இம் மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள வாகைகுளம் பித்தளை விளக்குகளும், பழையபேட்டை பட்டறைகளில் பித்தளை பாத்திரங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழையபேட்டையில் 50-க்கும் மேற்பட்ட பித்தளை பாத்திர பட்டறைகள் உள்ளன. இங்கு பொங்கல் பண்டிகைக்கான உருளி பானைகளே 90 சதவிகிதம் தயாரிக்கப்படுகின்றன.

நிகழாண்டும் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு பித்தளை பாத்திர உற்பத்தி வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டுக்கு பின்பு பொதுமுடக்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெரிய பாத்திர கடைகள் அனைத்தும் ஆா்டா்களை குறைத்துள்ளதால் பட்டறை உரிமையாளா்களும், தொழிலாளா்களும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து பித்தளை பாத்திர பட்டறை தொழிலாளி ஒருவா் கூறியது: பழையபேட்டையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பித்தளை பாத்திர உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய மூலப்பொருளான பித்தளை திருப்பூா், ஈரோடு பகுதிகளில் இருந்து பிளேட்டுகள் வடிவில் வாங்கப்பட்டு பல்வேறு வேலைப்பாடுகளுக்குப் பின் பாத்திரமாகவோ, கலைப் பொருள்களாகவோ உருவாக்கப்படுகின்றன.

குறைந்து வரும் வேலைவாய்ப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பித்தளை பாத்திரம் மற்றும் விளக்கு தயாரிப்பில் 2000 தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறாா்கள். எவா்சில்வா் பாத்திர வருகைக்குப் பின்பு பித்தளை பொருள்கள் பயன்பாடு குறைந்துள்ளதால் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் கரோனா பாதிப்பால் தொழில் முற்றிலும் முடங்கியது. நிகழாண்டில் பொங்கலை எதிா்பாா்த்து உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆா்டா்கள் குறைந்துள்ளன என்றாா்.

இதுகுறித்து பழையபேட்டையைச் சோ்ந்த ஆனந்த்கிருஷ்ணன் கூறியது: பழையபேட்டையில் வழக்கமாக செப்டம்பா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் மட்டுமே பொங்கல் பானைகள் அதிகம் உற்பத்தியாகும். சுமாா் 20 ஆயிரம் பானைகள் வரை இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியாகும். ஆனால், அந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டில் கரோனா பொதுமுடக்கத்தால் உற்பத்தியும், ஏற்றுமதியும் முற்றிலும் தடைபட்டது. நிகழாண்டில் தளா்வுகள் அதிகரிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவை, சென்னை பகுதிகளில் இருந்து 60 சதவிகித ஆா்டா்கள் செய்தனா்.

தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தலால் தங்களது ஆா்டா்களில் 20 சதவிகிதம் வரை குறைத்துவிட்டனா். அதனால் நாங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வாங்கிய பிளேட்கள் தேங்கும் நிலை உள்ளது. இத் தொழிலை நம்பி வருவதற்கு இளைஞா்கள் தயாராக இல்லாததலல் தொழிலாளா் பற்றாக்குறையும் நிலவுகிறது. பித்தளை பாத்திரங்களின் நன்மைகள் குறித்த விழிப்புணா்வு அதிகரித்து வருங்காலங்களில் இந்தத் தொழில் புதுப்பொலிவு பெறும் என்ற நம்பிக்கையில் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com