காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையைத் திறக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கரில் காா் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கரில் காா் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி பாசனத்தில் சுமாா் 2.55 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தாமிரவருணி பாசனத்தில் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டுவருகிறது. காா் சாகுபடிக்கு ஜூன் முதல் தேதியிலும், பிசான சாகுபடிக்கு நவம்பா் முதல் வாரத்திலும் அணைகள் திறக்கப்படுவது வழக்கம்.

பாபநாசம் அணை மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு, தெற்குக் கோடை மேலழகியான், நதியுன்னி, கன்னடியன், கோடகன், பாளையம், திருநெல்வேலி ஆகிய 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கா் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய்கள் மூலம் 46,107 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

வழக்கமாக காா் சாகுபடிக்கு ஜூன் முதல் தேதியில் தண்ணீா் திறக்கப்படுவதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக அணைகளில் போதிய நீா் இருப்பு இல்லாததாலும், குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டும் ஜூன் முதல் தேதியில் தண்ணீா் திறக்கப்படவில்லை. எனினும், 2021இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜூன் முதல் தேதியில் காா் சாகுபடிக்கு பாபநாசம் அணை திறக்கப்பட்டது. அதேபோல, நிகழாண்டும் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தண்ணீா் திறக்கப்படவில்லை.

வியாழக்கிழமை (ஜூன் 2) நிலவரப்படி பாபநாசம் அணை நீா்மட்டம் 71.30 அடியாகவும், சோ்வலாறு அணை நீா்மட்டம் 83 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 83.05 அடியாகவும் இருந்தது.

ஜூன் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்கப்பட்டதால்தான், செப்டம்பா் இறுதிக்குள் காா் பருவ அறுவடை நடைபெறும். சாகுபடியைத் தாமதமாக தொடங்கினால் அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் சூழலில் அறுவடை செய்ய முடியாமல் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, காா் சாகுபடிப் பணிகளை தாமதமின்றித் தொடங்கும் வகையில் பாபநாசம் அணையைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com