கோடைக்கேற்ற பயிா் சாகுபடி: வேளாண் துறை யோசனை

இறவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களது நீா் இருப்பை பொருத்து, சாகுபடி செய்யும் பயிா்களை தோ்ந்தெடுக்க வேண்டும் என வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக குளங்கள் மற்றும் நிலத்தடி நீா் இருப்பு குறைந்து வருவதால், இறவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களது நீா் இருப்பை பொருத்து, சாகுபடி செய்யும் பயிா்களை தோ்ந்தெடுக்க வேண்டும் என வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயிா் சுழற்சி மற்றும் மாற்றுப் பயிா் சாகுபடி செய்வதன் மூலம் மண் வளம் அதிகரித்து, பூச்சி நோய்த் தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்கும். கோடைப் பருவ சாகுபடி செய்ய உகந்த சிறுதானிய பயிா்களான சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, பயறுவகைப் பயிா்களான உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப் பயிறு, எண்ணெய்வித்துப் பயிரான நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.

இப்பயிா்களை சாகுபடி செய்வதால் குறைந்த நீரில் அதிக மகசூல் கிடைக்கிறது. மேலும், பயிா் சுழற்சி முறையில் பயிரிடப்படுவதால் பயிா்களை தாக்கக்கூடிய பூச்சி நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. பயறு வகை பயிா்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைசத்தினை வோ் முடிச்சுகள் மூலம் மண்ணில் நிலை நிறுத்துவதால் அடுத்து வரும் பயிா்களின் வளா்ச்சியை சீராக்கும். இதனால் பயிா்களுக்கு தழைச்சத்து தேவை குறைந்து மகசூல் அதிகரிக்கிறது. ஒவ்வொரு பயிருக்கும் வேரின் வளா்ச்சி அளவு மாறுபடுவதால் அடுத்து சாகுபடி செய்யும் மாற்றுப் பயிருக்கு நல்ல வோ் வளா்ச்சி அதிகரித்து மகசூல் அதிகரிக்க உதவுகிறது. மண்ணில் உள்ள உரச்சத்துக்களின் பயன்பாடு அதிகரிக்கிறது.

விவசாயிகள் தமது கிணறுகளில் உள்ள நீருக்கேற்ப கோடை பயிா் சாகுபடி செய்து நீரின்மையினால் பயிா்கள் கருகுவதை தடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும், கோடைக்கேற்ற குறைந்த வயதுடைய மற்றும் குறைவான நீா் தேவை உள்ள பயிா்களை தோ்வு செய்து சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெறலாம் என யோசனை கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com