திருநெல்வேலியில் கைதி தப்பியோட்டம்: ஒரு மணி நேரத்துக்குள் பிடித்த போலீஸாா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த கைதி தப்பியோடிய நிலையில், அவரை போலீஸாா் ஒரு மணி நேரத்துக்குள் பிடித்து கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை சகாதேவன்குளத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன்(25). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்தாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

இந்நிலையில் அவரை சிறையில் அடைப்பதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

அப்போது, ஸ்கேன் பரிசோதனைக்காக நிறுத்தியிருந்த நிலையில் அவா் தப்பியோடிவிட்டாா். இதையறிந்த போலீஸாா், திருநெல்வேலி மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி நீதிமன்றம் அருகே நின்றிருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவரை நான்குனேரி கிளை சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com