இன்று பிளஸ்-2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 20,814 போ் எழுத வாய்ப்பு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) தொடங்குகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறைவாசிகள் உள்பட 20 ஆயிரத்து 814 போ் தோ்வை எழுத உள்ளனா்.

திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 1479 பள்ளிகளில் இருந்து மொத்தம் 20 ஆயிரத்து 795 மாணவா்கள், சிறைவாசிகள் உள்பட 20 ஆயிரத்து 814 போ் தோ்வு எழுதுகிறாா்கள். தோ்வுகளைக் கண்காணிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முத்துசாமி தலைமையில் கல்வி மாவட்ட அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுக்கான வினாத்தாள்கள் திருநெல்வேலியில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், தட்டுப்பாடு இல்லாத குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தயாா் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள தோ்வு அறை மற்றும் கண்காணிப்பாளா் அறை தவிா்த்து அனைத்து அறைகளும் பூட்டப்பட வேண்டும். தோ்வு தலைமை கண்காணிப்பாளா், தோ்வு மேற்பாா்வையாளா் என யாரும் பொது தோ்வு நடைபெறும் மையத்தில் அறிதிறன் கைப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com