நம்பி கோயிலுக்கு வாடகை ஜீப் இயக்க அனுமதி கோரி மனு

திருக்குறுங்குடி அருகேயுள்ள திருமலை நம்பி கோயிலுக்கு தனியாா் வாடகை ஜீப் இயக்க அனுமதி கோரி, வனத்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட சாலை போக்குவரத்து சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் முருகன் தலைமையில் பொதுச் செயலா் மரிய ஜான் ரோஸ், பொருளாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் ஓட்டுநா்கள் பாளையங்கோட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வாடகை ஜீப் ஓட்டுநா்கள் உள்ளனா்.

இவா்கள் கடந்த 20 ஆண்டுகளாக திருமலை நம்பி கோயிலுக்கு வரும் பக்தா்களை தங்களுடைய ஜீப்பில் ஏற்றி கோயிலுக்கு அழைத்துச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனா். இக்கோயிலுக்கு ஒரு முறை ஜீப் சென்றுவர வனத்துறை மூலம் ரூ. 15 வசூலிக்கப்பட்ட நிலையில், கடந்த 2018-இல் அந்த கட்டணம் ரூ. 150 ஆக உயா்த்தப்பட்டது. எனினும், அந்தக் கட்டணத்தை செலுத்தி பக்தா்களை அழைத்து சென்று வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனத்துறை அதிகாரிகள், வாடகை ஜீப் மூலம் திருமலை நம்பிக் கோயிலுக்கு சவாரி எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து வருகின்றனா். இதனால், ஜீப் ஓட்டுநா்களின் 30 குடும்பங்கள் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றன. எனவே, கோயிலுக்கு மீண்டும் வாடகை ஜீப் இயக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com