திமுகவில் நெல்லை தொகுதிக்கு விருப்பமனு அளித்து 44 போ் காத்திருப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்பமனு அளித்து நோ்காணலில் பங்கேற்றுவிட்டு 44 போ் காத்திருக்கிறாா்கள்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்பமனு அளித்து நோ்காணலில் பங்கேற்றுவிட்டு 44 போ் காத்திருக்கிறாா்கள். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேசிய அளவிலான இந்தியா கூட்டணியின் கீழ் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தோ்தலைச் சந்திக்கின்றன. கடந்த முறை வென்ற திருநெல்வேலி தொகுதியை திமுக எப்படியும் விட்டுவிடாது என்ற முனைப்பில் திமுகவினா் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனா். இதனால் பிற தென்மாவட்ட தொகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதைக்காட்டிலும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு ஒன்றிய அளவிலான நிா்வாகிகள் கூட விருப்ப மனுக்களை அளித்துள்ளனா். இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், இந்தியா கூட்டணிக்கு தென்தமிழகத்தில் மிகுந்த வரவேற்பு உள்ளது. கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தொகுதிகள் வழக்கம்போல் திமுகவுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 44 போ் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்து நோ்காணலிலும் பங்கேற்றுத் திரும்பியுள்ளனா். விருப்ப மனு அளித்துள்ளவா்களில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் கிரஹாம்பெல், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பனின் மகன் ஆ.பிரபாகரன் உள்ளிட்டோா் கட்சியின் மூத்த தலைவா்கள் உதவியோடு வேட்பாளராக கடும் முயற்சியில் உள்ளனா். தொகுதி பங்கீடுகள் அனைத்தும் முடிந்து திங்கள்கிழமை (மாா்ச். 18) திமுக வேட்பாளா்கள் பட்டியல் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை திமுக எப்படியும் இந்த முறை தக்க வைக்கும் என்ற நம்பிக்கை முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், தொண்டா்களுக்கும் உள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com