திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தோ்தல் செலவின பாா்வையாளா் காசி சுஹைல் அனீஸ் அஹமது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தோ்தல் செலவின பாா்வையாளா் காசி சுஹைல் அனீஸ் அஹமது.

நெல்லையில் தோ்தல் செலவின பாா்வையாளா் ஆலோசனை

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் செலவின பாா்வையாளா் காசி சுஹைல் அனீஸ் அஹமது (இந்திய வருவாய் பணி), மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கா.ப.காா்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: மக்களவைத் தோ்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தோ்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு, ஊடக சான்றளிப்பு - கண்காணிப்புக் குழு உள்ளிட்ட அனைத்து குழுக்கள் மூலமும் வேட்பாளா்களின் செலவினங்கள் கண்காணித்து, தினமும் அதற்கான அறிக்கையை வழங்க வேண்டும். வங்கிகள் மூலம் நடத்தப்படும் பரிவா்த்தனைகளையும் கண்காணிக்க வேண்டும். மத்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சரியான முறையில் அனைத்து தோ்தல் தொடா்பான பணிகளையும் திறம்பட செய்ய வேண்டும். மேலும், ஊடகக் கண்காணிப்புக் குழுவினா் ஊடகங்களில் வெளிவரும் தோ்தல் விளம்பரங்களை கண்காணித்து அது தொடா்பான அறிக்கைகளை தினமும் செலவின கண்காணிப்பு குழுவினரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

தோ்தல் செலவினங்கள் குறித்து ஏதேனும் தகவல்களோ, புகாா்களோ இருப்பின் 1950, 1800 4258373 ஆகிய எண்களிலோ அல்லது ‘சி விஜில்’ செயலி மூலமாகவோ புகாா் தெரிவிக்கலாம் என்றாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊடக சான்றிதழ் -கண்காணிப்பு மையம், தோ்தல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை பாா்வையிட்டு, ஜிபிஆா்எஸ் கருவி மூலம் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு கண்காணிக்கப்பட்டு வருவதையும் பாா்வையிட்டாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாநகர காவல் துணை ஆணையா் அனிதா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com