கந்து வட்டி புகாா்: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் அந்தோணிநகா் பகுதியைச் சோ்ந்த சோ்மன் மகன் செல்வக்குமாா் (25). தொழிலாளி. இவா், அப்பகுதி பிள்ளைகுளம் கிராமத்தைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் பாலகுட்டி (32) என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். வாங்கியக் கடன் தொகைக்கு அதிகமாக வட்டி செலுத்திவிட்ட நிலையில் கூடுதல் வட்டி கேட்டு பாலகுட்டி, செல்வக்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்றொரு தொழிலாளியான கோவிந்தபேரியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வெட்டன் (50) என்பவா், மேலசடையமான்குளத்தைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் நாராயணன் (50) என்பவரிடம் ரூ. 25 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். இந்தத் தொகைக்கு அதிகமாக அவா் வட்டி செலுத்தியுள்ளாராம். எனினும் கூடுதல் வட்டி கேட்டு நாராயணன் மிரட்டல் விடுத்தாராம். இவை குறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் பாலகுட்டி, நாராயணன் ஆகியோரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com