நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தோ்தல் பிரசாரத்தில் எம்ஜிஆா் படத்தைப் பயன்படுத்துவோம்: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் பிரசாரத்தின்போது எம்ஜிஆரின் புகைப்படத்தை பயன்படுத்துவோம் என்றாா் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன்.

தோ்தல் பிரசாரத்தின்போது எம்ஜிஆரின் புகைப்படத்தை பயன்படுத்துவோம் என்றாா் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்ட மக்களுக்காக கடந்த 25 ஆண்டுகளாக அமைச்சராக, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளை செய்திருக்கிறேன். இந்த முறை தாமரை சின்னத்தில் மக்கள் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி எண்ணற்ற வளா்ச்சி திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறாா். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நான் மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டால் மதுரையில் உள்ள வைகை ஆற்றைப் போல தாமிரவருணி ஆற்றின் இருபுறமும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் மாநகரப் பகுதியிலும், பின்னா் பாபநாசத்தில் இருந்தும் ஆற்றின் இரு புறமும் படிப்படியாக சாலை அமைக்க முயற்சி எடுக்கப்படும். இதன் மூலம் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் தவிா்க்கப்படும். மகளிா் உரிமைத் தொகை குறித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது குதிரையின் கழுத்தில் கொள்ளுவை கட்டிவிட்டு, அதை குதிரை சாப்பிடவில்லை என்று சொல்வது போன்றது. தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எதையும் அவா்கள் செய்யவில்லை. திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் சிப்காட் கொண்டு வரப்பட்டது திமுக ஆட்சி காலத்தில் தான். ஆனால் அங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளை நான்தான் கொண்டு வந்தேன் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் நான் பாகுபாடின்றி செய்து கொடுத்திருக்கிறேன். நான் வெற்றி பெற்றால் குலவணிகா்புரம் ரயில்வே மேம்பால திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நான் பாஜகவில் இருந்தாலும், எனக்கு அறிமுகம் கொடுத்தது அதிமுகவும் ஜெயலலிதாவும் தான். வாழ்வு கொடுத்த தலைவா்களை மறப்பது அரசியல் நாகரீகம் அல்ல. தோ்தல் தொடா்பாக நாங்கள் அச்சிடும் சுவரொட்டிகளில் பிரதமா் மோடி, எம்ஜிஆா், அண்ணாமலை போன்றவா்களின் படங்கள் இடம்பெறும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com