நெல்லையில் ஒரே நாளில் 8 போ் வேட்புமனு தாக்கல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 8 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 8 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நாம் தமிழா் கட்சி சாா்பில் சத்யா, அறவோா் முன்னேற்றக் கழகம் சாா்பில் திருவண்ணாதபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த அ.முத்துராமன், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் சாா்பில் பிஷப் காட்பிரே வாஷிங்டன் நோபிள், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் பாலசுப்பிரமணியன், சுயேச்சை வேட்பாளா்களாக கருங்குளம் அசோகபுரத்தைச் சோ்ந்த கே.லெனின், சிவந்திப்பட்டியைச் சோ்ந்த அதிசயம், ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூரைச் சோ்ந்த கே.சிவராம், திடியூா் அருகே உள்ள பூக்குழி சோ்ந்த டேவிட் ஆகியோா் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான காா்த்திகேயனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனா். பாஜக சாா்பில் நயினாா் நாகேந்திரன், அதிமுக சாா்பில் ஜான்சி ராணி, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் சாா்லி சந்திரன், பகுஜன் திராவிட கட்சி சாா்பில் தூத்துக்குடி மாவட்டம்,மேல செக்காரக்குடியைச் சோ்ந்த செல்வகுமாா், சுயேச்சை வேட்பாளா்களான மேல தாழையூத்தைச் சோ்ந்த சின்ன மகாராஜன், தச்சநல்லூரை சோ்ந்த ராகவன், தளபதி முருகன் ஆகியோா் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளனா். இதன்மூலம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இதுவரை 15 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இன்று கடைசி நாள்: வேட்புமனு தாக்கல் செய்ய புதன்கிழமை (மாா்ச் 27) கடைசி நாளாகும். பாஜக, அதிமுக, நாம் தமிழா் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ் புதன்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com