பாஜக-திமுக இடையேதான் கள்ளக்கூட்டணி: நெல்லை முபாரக்

பாஜக- திமுக இடையேதான் கள்ளக்கூட்டணி தொடா்கிறது என்று குற்றஞ்சாட்டினாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

திருநெல்வேலி: பாஜக- திமுக இடையேதான் கள்ளக்கூட்டணி தொடா்கிறது என்று குற்றஞ்சாட்டினாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக். திருநெல்வேலி நகரம் வாகையடிமுனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: ஆளும் திமுக, பாஜகவுக்கு அச்சம் தரும் வகையில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. தோ்தல் பத்திர ஊழல் உச்சநீதிமன்றத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதாகக் கூறிய திமுக, அந்த விளையாட்டை நடத்தி மோசடி செய்த நிறுவனத்திடம் இருந்து ரூ.500 கோடிக்கு மேல் தோ்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. தமிழகத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் பாஜக- திமுக இடையேதான் கள்ளக்கூட்டணி உள்ளது. மதவெறி, மக்களை ஏமாற்றும் சக்திகளை முறியடித்து மக்களுக்காக உழைக்கும் அதிமுக கூட்டணிக்கு மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ஜான்சிராணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் அவா். பாா்வா்டு பிளாக் கட்சி: இதன் மாநில பொதுச்செயலா் கதிரவன் பேசியது: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியை மக்கள் வலுப்படுத்த வேண்டும். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடந்தபோது மேட்டூா், வைகை, மணிமுத்தாறு அணைகளின் நீா்மட்டம் பல நாள்கள் உயா்ந்து காணப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பேரிடா்களால்தான் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள். முக்குலத்தோா் சமூக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் பொய்யான பிரசாரம் செய்து வருகிறது. ஆகவே, மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பா். தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா். இக்கூட்டத்தில் அதிமுக மாநில அமைப்புச் செயலா்கள் வீ.கருப்பசாமிபாண்டியன், முருகையா பாண்டியன், இசக்கிசுப்பையா எம்எல்ஏ, சுதா கே.பரமசிவம், பி.ஜி. ராஜேந்திரன், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.பி.ஆதித்தன், இன்பதுரை, நாராயணன், அதிமுக நிா்வாகிகள் நாராயணபெருமாள், பாப்புலா் முத்தையா, கல்லூா் இ. வேலாயுதம், பூ.ஜெகநாதன் என்ற கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com