வேகமாகக் குறைந்துவரும் வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணை நீா்மட்டம்

வேகமாகக் குறைந்துவரும் வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணை நீா்மட்டம்

நீா்மட்டம் 8 அடியாக உள்ள திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை.

வெயிலின் தாக்கம் காரணமாக வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளின் நீா்மட்டம் வேகமாகக் குறைந்துவருகிறது.

ஆண்டுதோறும் களக்காடு, திருக்குறுங்குடி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அக்டோபா் தொடங்கி டிசம்பா் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழைதான் களக்காடு, நான்குனேரி வட்டார விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகும்.

வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த கொள்ளளவு 49.25 அடி. இந்த அணை ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழையால் நிரம்பிவிடும். இதனால், களக்காடு, நான்குனேரி வட்டாரங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பி, அதன்மூலம் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் நெல், வாழைப் பயிா்கள் அமோக விளைச்சல் பெறும்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரே நாளில் பெய்த பலத்த மழையால் அணை, குளங்கள் நிரம்பின. இதனால், நெல், வாழை பயிா்கள் தண்ணீா்த் தட்டுப்பாடின்றி நல்ல மகசூல் கொடுத்தன.

இந்நிலையில், நிகழாண்டு ஏப்ரல் மாதத் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளின் நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 12 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 8 அடியாகவும் உள்ளது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக இந்தத் தண்ணீரும் ஒரே வாரத்தில் வடு, நிலத்தடி நீா்மட்டமும் குறையும் ஆபத்து உள்ளது.

கொடுமுடியாறு அணை மூலம் குடிநீா் விநியோகம் பெறும் வடக்கன்குளம், காவல்கிணறு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழியோரக் கிராமங்களின் குடிநீா் விநியோகம் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களில் கால்பகுதிகூட நீா் இல்லாத நிலையில், அணைகளும் வடுவிட்டால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன், கால்நடைகளும் தண்ணீா் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகளும், பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com