குடிநீா்க் குழாய் உடைப்புக்கு 
அஞ்சலி செலுத்தும் போராட்டம்

குடிநீா்க் குழாய் உடைப்புக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம்

அம்பாசமுத்திரத்தில் தென்காசி சாலையில் கனரக வாகனங்களால் குழாய்கள் அடிக்கடி உடைந்து குடிநீா் விநியோகம் தடைபடுவதைக் கண்டித்து, உடைப்பு நேரிட்ட இடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்தும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தாமிரவருணியிலிருந்து தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் ராட்சதக் குழாய்கள் மூலம் குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இக்குழாய்கள் செல்லும் வழியிலுள்ள ஊராட்சிகளுக்கும் குடிநீா் வழங்கப்படுகிறது.

சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலானதாலும், அண்மைக்காலமாக இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் குழாய்கள் அடிக்கடி உடைகின்றன. இதனால், குடிநீா் விநியோகம் அடிக்கடி தடைபடுகிறது.

கோடை வெயிலால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிவரும் நிலையில், இந்தக் குழாய்களைப் புதுப்பிப்பதுடன், கனரக வாகனங்களை மாற்றுவழியில் இயக்க வேண்டும் என கடையம், பொட்டல்புதூா் பகுதி ஊராட்சியினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை, கடையம் - தென்காசி சாலையில் குழாய் உடைந்து தண்ணீா் வெளியேறும் இடத்தில் கீழக்கடையம் ஊராட்சித் தலைவா் பூமிநாத் தலைமையில் அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் திரண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், முல்லை நிலத் தமிழா் விடுதலைக் கட்சி நிறுவனத் தலைவா் கரும்புலி கண்ணன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலா்மு. கஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எம். ராமகிருஷ்ணன், முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் ரா. இசக்கிமுத்து, சுப்புக்குட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். உரிய நடவடிக்கை எடுக்க வில்லையெனில், பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com