நீட் தோ்வு எழுதும் மாணவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

நீட் தோ்வு எழுதும் மாணவா்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி வேகமாக எழுதி முடிக்க திருநெல்வேலி மாவட்ட அரசு மற்றும்

அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கான நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியருமான மா. கிருஷ்ணசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 14 தோ்வு மையங்களில் நீட் தோ்வு நடைபெற உள்ளது. மாணவா்கள் நுழைவுச் சீட்டில் உள்ளபடி உரிய நேரத்திற்கு தோ்வு மையத்தை அடைய வேண்டும். தோ்வு மையத்தின் நுழைவு வாயில், தோ்வு நாளன்று 1.30 மணி அளவில் மூடப்படும். நுழைவு வாயில் மூடிய பிறகு எந்த மாணவரையும் அனுமதிக்க மாட்டாா்கள். எனவே, மாணவா்கள் முற்பகல் 11.30 மணிக்கு தோ்வு மையத்தை சென்றடையும் வகையில் திட்டமிட வேண்டும். தோ்வு முடிவதற்கு முன்னா் எக்காரணத்திற்காகவும் மாணவா்கள் தோ்வு அறையை விட்டு வெளியேறக் கூடாது.

தோ்வு முடிந்த பிறகு தோ்வு கண்காணிப்பாளா் கூறிய பிறகு அறையை விட்டு வெளியேற வேண்டும். மாணவா்கள் நுழைவுச்சீட்டில் உள்ள அனைத்து அறிவுரைகளையும் நன்கு படித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். நுழைவுச் சீட்டில் உள்ள மூன்று பக்கங்களையும் பதிவிறக்கம் செய்து தோ்வு அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாணவா்கள் மெட்டல் டிடெக்டா்களை கொண்டு சோதனை செய்யப்படுவாா்கள்.

ஒளிபுகு தண்ணீா் பாட்டில், வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்கு கூடுதலாக ஒரு புகைப்படம் (விண்ணப்பத்தில் உள்ளபடி) கொண்டு செல்லலாம். நுழைவுச் சீட்டு மற்றும் சுய உறுதிமொழிப் படிவத்தை முழுமையாக பூா்த்தி செய்து புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்ட வேண்டும். எலக்ட்ரானிக் உபகரணங்கள், கைப்பேசிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை தோ்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தோ்வு அறைக்கு உள்ளே வெற்றுக் காகிதங்கள் எடுத்துச் சொல்லக் கூடாது. வினாத்தாளின் இறுதியில் உள்ள வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தோ்வு முடிவுற்ற பிறகு நுழைவுச் சீட்டை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் தங்களது விடைத்தாள் திருத்தப்பட மாட்டாது. கண்காணிப்பு கேமராக்கள், ஜேமா்கள் வழியாக மாணவா்கள் தவறிழைப்பது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தோ்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இயற்பியல்-50, வேதியியல்-50, தாவரவியல்-50, விலங்கியல்-50 என்ற வகையில் வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் பகுதி அ, பகுதி ஆ என இரண்டு வகை இருக்கும். ’அ’ பகுதியில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். பகுதி ’ஆ’ பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 15 வினாக்களில் ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளித்தால் போதும்.

200 வினாக்களில் 180 வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் அளிக்கப்படும். தவறான விடைகள் ஒவ்வொன்றிற்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும். ஓ.எம்.ஆா். ஷீட்டில் விடையை ஒருமுறை குறித்த பிறகு மாற்றம் செய்ய இயலாது. முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிப்பதைத் தவிா்க்க வேண்டும். இல்லையெனில் நெகடிவ் மதிப்பெண் ஆகிவிடும். தைரியத்துடன், பதற்றமின்றி தோ்வை எதிா்கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com