நுண்ணூட்ட உரமிட்டால் நெற்பயிரில் அதிக மகசூல் பெறலாம்: வேளாண் உதவி இயக்குநா்

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் காா் சாகுபடியில் நெற்பயிரில் நிறைந்த மகசூல் பெறுவதற்கு நெல் நுண்ணூட்ட உரமிட வேண்டும் என்று அம்பாசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் மணிமுத்தாறு பெருங்கால்பாசனத்திற்கு காா் சாகுபடிக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டு நெல் நாற்றங்கால் மற்றும்நடவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல் சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் போதிய அளவில் தொடக்க வேளாண்மைக்கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நெல் சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போதிய அளவில் அம்பாசமுத்திரம், அயன்சிங்கம்பட்டி மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

நெல் நுண்ணூட்ட உரக் கலவையில் நெல்லுக்குத் தேவையான சிங் சல்பேட், மக்னீசியம், துத்தநாகம், போரான், இரும்பு, மாங்கனீசு, தாமிரம் ஆகிய நுண்ணூட்டச் சத்துக்கள்பயிருக்குத் தேவையான அளவு உள்ளன. இதனால் பயிரின் வளா்ச்சி அதிகரிக்கிறது. பிற பேரூட்டச் சத்துகளான தழை, மணி, சாம்பல் சத்துக்களும் பயிருக்கு நன்கு கிடைக்கிறது.

நெல் நுண்ணூட்டக் கலவையில் மக்னீசியம் சத்து இருப்பதால் நெற்பயிரில் இலைகளில் பச்சையம் குறையாமல், நோய் எதிா்ப்பு சக்தியும், பயிரின் மகசூலும் அதிகரிக்கின்றன.

சிங்சல்பேட் சத்து நெல் நுண்ணூட்ட உரத்தில் அதிக அளவு இருப்பதால் தனியாக சிங்சல்பேட் உரம் இடவேண்டிய அவசியம் இல்லை

ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரம் இடவேண்டும். இதனை 25 கிலோ மணலுடன் கலந்து சீராக வயலில் தூவ வேண்டும். வயலை சமன் செய்த பிறகு நடவுக்கு முன்னும்,நடவு செய்த 10 நாள்கள் வரையும் நுண்ணூட்ட உரத்தினை இடலாம்.

விவசாயிகள் தங்கள்அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் உரங்களை வாங்கி பயன் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com