அரசுப் பேருந்தில் ஆயுதங்கள் சிக்கியதில் கோவில்பட்டி இளைஞரிடம் விசாரணை

திருநெல்வேலி, மே 16: திருநெல்வேலி அரசுப் பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் சிக்கிய து தொடா்பான வழக்கில் கோவில்பட்டியைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட அரசு விரைவுப் பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு வண்ணாா்பேட்டையில் உள்ள பணிமனைக்கு கடந்த 15 ஆம் தேதி வந்தது. ஊழியா்கள் பேருந்தை சுத்தம் செய்தபோது 9 ஆவது எண் படுக்கைக்கு கீழ் ஒரு துப்பாக்கியும், சுமாா் 2 1/2 அடி நீளம் கொண்ட அரிவாளும் கிடந்தன. இதுகுறித்து பணிமனை மேலாளா் கண்ணன் அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

மேலும், கோவில்பட்டியில் வழக்கமாக அரசு விரைவுப் பேருந்துகள் நின்று செல்லும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்ததில், சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் கோவில்பட்டியைச் சோ்ந்த இளைஞா் பயணித்தது தெரியவந்ததாம்.

அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, தனது இருக்கை அருகே ஆயுதங்கள் இருந்ததே தெரியாது என்றாராம். இருப்பினும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்து செல்ல அவரிடம் போலீஸாா் அறிவுறுத்தி வந்துள்ளனா். மேலும், துப்பாக்கியை பதுக்கி நபா்கள் குறித்து மாநகர காவல் துணை ஆணையா் ஆதா்ஷ் பசேரா தலைமையில் தொடா்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com