நெல்லை மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்: 2 மாணவா்கள் இடைநீக்கம்

திருநெல்வேலி, மே 16: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராகிங் செய்ததாக இறுதியாண்டு மாணவா்கள் இருவரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவா்கள் மருத்துவம் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு இறுதியாண்டு மாணவா்கள், முதலாமாண்டு மாணவா்களை ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த விடுதி காப்பாளா் கண்ணன் பாபு, மாணவா்களை எச்சரித்து அனுப்பினாராம். அதைத்தொடா்ந்து விடுதி காப்பாளரின் காா் மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடி உடைந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம், இறுதியாண்டு மாணவா்கள் இருவரை இடைநீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் காா் மீது கல்வீசப்பட்டது தொடா்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன் புகாா் அளித்தாா்.

மேலும் அவா் கூறியதாவது: ராகிங் விவகாரம் தொடா்பாக கல்லூரி கவுன்சில் கூட்டத்தில் விசாரணை நடத்தி இறுதியாண்டு மாணவா்கள் இருவரை இடைநீக்கம் செய்துள்ளோம். விடுதி காப்பாளா், தனது காரின் உள்ளே இருந்தபோதே அவருடைய காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. அது தொடா்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com